×

ஸ்பெயினில் இருந்து வாங்கப்பட்ட சி 295 விமானம் இந்திய விமானப்படையில் இணைப்பு

காசியாபாத்: ஸ்பெயின் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட சி 295 விமானம் நேற்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது. இந்திய விமானப்படையில் சரக்கு போக்குவரத்து வசதிக்காகவும், 40 ஆண்டுகளாக விமானப்படை சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் அவ்ரோ 748 விமானங்களுக்கு மாற்றாகவும், ஸ்பெயின் நாட்டில் உள்ள சி 295 விமானம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக ஸ்பெயின் நாட்டில் உள்ள ஏர்பஸ் டிபென்ஸ் மற்றும் ஸ்பேசுடன், இந்திய அரசு ₹21,935 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.

இதில் முதல் சி 295 விமானம் செப்.13ம் தேதி தெற்கு ஸ்பெயின் நகரமான செவில்லியில் இந்திய விமானப் படை தளபதி ஏர் சீப் மார்ஷல் விஆர் சவுத்திரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த விமானம் செப்.20ல் குஜராத் மாநிலம் வதோதராவில் வந்து தரையிறங்கியது. இதையடுத்து நேற்று திட்டமிட்டபடி டெல்லிக்கு அருகிலுள்ள ஹிண்டனில் நடைபெற்ற விழாவில் இந்த விமானம் முறையாக இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டது. இந்த விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.

இந்த விழாவை குறிக்கும் வகையில் நடந்த சர்வ தர்ம பூஜையிலும் அவர் பங்கேற்றார். மேலும் விமானப்படை தலைவர் ஏர்சீப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் விமானப்படை மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஸ்பெயின் நாட்டில் இருந்து பெறப்பட்ட இந்த சி 295 முதல் விமானம் இந்திய விமானப்படை எண் 11ல் இணைக்கப்பட்டுள்ளது. இது விமானப்படையின் பழமையான படைப்பிரிவுகளில் ஒன்றாகும். தற்போது இந்த படைப்பிரிவு வதோதரா விமானப்படைத்தளத்தில் இயங்கி வருகிறது.

மிகப்பெரிய மைல்கல்
விமானப்படை முன்னாள் தலைவர் பதவுரியா கூறுகையில்,’ சி 295 விமானம் அதிநவீன மயமானது. மற்றும் மிகப்பெரிய அளவிலான திறன் கொண்டது. அவ்ரோ 748 விமானத்திற்கு மாற்றாக இந்த விமானம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது கடற்படைக்கு மிகப்பெரிய வலுவாக மாறும். அதோடு நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மிகப்பெரிய போக்குவரத்து விமானம், அதுவும் தனியார் துறையில் இது முதன்மையானது. எனவே, அந்த கண்ணோட்டத்தில், தொழில்துறை கண்ணோட்டத்தில், இது மிகப் பெரிய மைல்கல்’ என்றார்.

* இந்தியா-ஸ்பெயின் ஒப்பந்தம் அடிப்படையில் 2025ம் ஆண்டுக்குள் மேலும் 16 சி 295 விமானங்களை வழங்கும்.
* அதன் பிறகு 40 விமானங்கள் இந்தியாவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் மூலம் தயாரிக்கப்பட்டு அசெம்பிள் செய்யப்படும்.
* இதற்காக ஐதராபாத்தில் விமானங்களின் உதிரிபாகங்களின் தயாரிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
* இந்த பாகங்கள் வதோதராவில் உள்ள இறுதி அசெம்பிளி லைனுக்கு அனுப்பப்படும். அங்கு விமான தயாரிப்பு முழுமை அடையும் என்று கூறப்பட்டுள்ளது.

The post ஸ்பெயினில் இருந்து வாங்கப்பட்ட சி 295 விமானம் இந்திய விமானப்படையில் இணைப்பு appeared first on Dinakaran.

Tags : Spain ,Indian Air Force ,Gaziabad ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இரவு...